கிருமிநாசினி தெளிப்பான் வெடித்தது; பார்வையை இழக்கும் நிலையில் மாநகராட்சி ஊழியர்!
மதுரையில் கொரோனா தடுப்பு பணியின்போது கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் வெடித்து சிதறியதில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் கண் பார்வையை இறக்கும் நிலையில் உள்ளார்.
மதுரை மாநகராட்சியில் மாரிமுத்து என்பவர் ஒப்பந்த பணியாளராக கடந்த 8 மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகம் வசிக்கும் 41 வது வார்டு நரிமேடு பகுதிகளில் லைசால் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். உரிய பாதுகாப்பு உபகரணங்களை இல்லாத நிலையில் மருந்தை நிரப்பிய மாரிமுத்து தெரு தெருவாக சென்று அடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மருந்து தெளிப்பான் இயந்திரம் வெடித்து சிதறியது. இயந்திரத்தில் உள்ள சிறிய சிலிண்டரும் வெடித்து சிதறியதில் மாரி முத்துவின் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. அவரின் முகம் வெந்து போனதோடு, கண் பார்வையும் தெரியாமல் அவதிப்படுவதாக சொல்லப்படுகிறது.
தற்போது, மாரிமுத்து சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரமற்ற இயந்திரங்களை வாங்கி பயன்படுத்துவதால், இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாக குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக, அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் மாரிமுத்துவின் பார்வை குறைபாடு ஏற்பட்டதற்கு மாநகராட்சி உரிய உபகரணங்கள் வழங்காததே காரணம். அரசு தங்கள் குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்