ஏழை சிறுமிகளை மிரட்டி சீரழித்த ராட்சசன்கள்..! பேயை விட கொடுமை..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிப்புக்குள்ளாகி இருந்த இரு ஏழை சிறுமிகளுக்கு, பேயை விரட்ட பூஜை செய்வதாக கூறி மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மந்திரவாதியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஏழை தம்பதியினர் தங்களது 13 வயது மற்றும் 15வயதுள்ள இரு பெண் குழந்தைகளுடன் சேலத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
கொரோனா காலத்திற்கு பின்னர் போதிய ஊதியத்தை தோட்டத்தின் உரிமையாளர் வழங்கவில்லை என்பதால், குடும்பத்துடன் அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது அவரது இரு மகள்களும் பிரம்மை பிடித்தது போல காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக குறி கேட்பதற்காக 2 சிறுமிகளையும் தங்களது உறவினரும் மந்திரவாதியுமான மங்களபுரம் பகுதியிலுள்ள சேகர் பூசாரி என்பவனிடம் அழைத்துச்சென்றுள்ளனர். சிறுமிகள் இருவருக்கும் பேய் பிடித்திருப்பதாக கூறிய சேகர், பேயை விரட்டுவதற்கு இருவரையும் தனது பாதுகாப்பில் விட்டுச்செல்லும் படி கூறியிருக்கின்றான்.
சம்பவத்தன்று தங்கைக்கு பேய் விரட்டுவதாக தனது பூஜை அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சேகர் இதனை வெளியில் சொன்னால் தலை வெடித்து சிதறிவிடும் என்று அச்சுறுத்தி அனுப்பி உள்ளான். இதனையடுத்து மூத்த சிறுமியிடம் 4 நாட்களாக தொடர்ந்து பாலியல் அத்துமீறில் ஈடுபட்டுள்ளான் அந்த வக்கிர ராட்சசன்..!
இதுபற்றி பெற்றோர்களிடம் கூறினால் குடும்பத்தையே கொலை செய்து விடுவதாக பயங்கரமாக மிரட்டி அனுப்பியுள்ளான். இதனால் மிகவும் பயந்துபோன 2சிறுமிகளும் மந்திரவாதியால் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இதுசம்மந்தமாக சிறுமியின் பெற்றோர்கள் மங்களபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குபதிந்து விசாரித்த காவல்துறையினர், பில்லி சூனியம், ஜோதிடம் பார்ப்பதாக கூறி சிறுமிகளிடமும், பெண்களிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பாலியல் ராட்சசன் சேகரை போக்சோ சட்டத்த்தின்கீழ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஏற்கனவே இரு சிறுமிகளையும் தோட்டத்தில் வைத்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தோட்டத்து உரிமையாளரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெற்றோர் தங்கள் பெண்குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி அவர்களுக்கு உடல் ரீதியாக என்ன பிரச்சனை உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் பில்லி சூனியம் பேய் என்று கூறும் மோசடி ஆசாமிகளை நம்பி பெண் குழந்தைகளை தனியாக விட்டுச்செல்வதை தவிருங்கள் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.
அதே நேரத்தில் புராண காலத்தில் பெண்களை தொடர்ந்த பிரம்மராட்சதர்களை போல, தற்காலத்தில் சின்னஞ்சிறுமிகளை கூட விட்டுவைக்காத பாலியல் ராட்சதர்களுக்கு கடுமையான தண்டனைகளை விரைவாக வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!