கள்ளச்சாவி பயன்படுத்தி சி.பி.ஐ வசமிருந்த 104 கிலோ தங்கம் திருட்டு- சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தகவல்
கடந்த 2012ம் ஆண்டு சட்ட விரோதமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக சிபிஐக்கு தகவல் வந்ததை அடுத்து, சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, 400 கிலோ தங்கம் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக, சுரானா நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கர்களின் 72 சாவிகளும் 400.47 கிலோ பறிமுதல் செய்ததாக தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது
இதற்கிடையில், சுரானா நிறுவனம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேன்டர்டு சார்டர்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் பெற்ற 1,160 கோடி ரூபாயை ஈடுகட்ட ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சிறப்பு அதிகாரிக்கு வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தை காணவில்லை. இதனையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்க கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்இந்த மனுவை கடந்த 12 ம் தேதி விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த 24 ம் தேதி சிபிசிஐடி போலீசார் காணாமல் போன தங்கம் குறித்து திருட்டு வழக்கு (380 IPC) பதிந்து விசாரணையை கையில் எடுத்தனர். இந்த நிலையில் சிபிஐ வசம் இருந்த தங்கத்தில் 103 கிலோ மாயமான விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்று மதியம் முதலே சோதனை நடத்தினர்
சி.பி.சி.ஐ.டி, எஸ்.பி விஜயகுமார் தலைமையிலான போலீசார்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். இந்த நிலையில் சோதனைக்குப் பின் சி.பி.ஐ கட்டுபாட்டில் இருந்த பெட்டகத்தை கள்ள சாவி போட்டு எடுத்தது சி.பி.சி.ஐ.டி ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சுரானா அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் இருந்த பெட்டகம் சி.பி.ஐ விசாரணையின் போது சீல் வைக்கப்பட்டது. அதன் பின் சீலை உடைத்து கள்ளசாவி பயன்படுத்தி 103.864 கிலோ தங்கம் எடுக்கப்பட்டுள்ளது என சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெட்டக சீலை உடைத்து கள்ள சாவி போட்டு தங்கத்தை திருடியது யார்? எப்போது அவர்கள் திருடினார்கள்? இந்த தங்க திருட்டு விவகாரத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் மற்றும் சுரானா நிறுவனத்தார்களுக்கு தொடர்புள்ளதா என சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.