ஹெல்மெட் போடலையா, புடி ஒரு மரக் கன்றை...’ - வாகன ஓட்டிகளை அன்பாக மிரட்டி அனுப்பிய இன்ஸ்பெக்டர்!


 ரியலூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிவந்தவர்களுக்கு, இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுத்து மூன்று மாதம் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற நூதன தண்டனையை வழங்கியுள்ளார் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அரியலூர் நகரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்தப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலையம் மற்றும் தேளூர் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.  பிறகு, அரியலூர் மாவட்டம், டி.பழூர் காவல் நிலைய எல்லைக்கு வந்தார். அங்கு ஊராட்சி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . எமன் ஏரி கரையில் மரக்கன்றுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நட்டு வைத்தார்.

அதன் பிறகு, சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த வழியே ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்திய அவர், ஒவ்வொருவர் கையிலும் ஒரு மரக்கன்றைக் கொடுத்து ஏரிக்கரையில் நட்டு வைத்து, அதற்குத் தண்ணீர் ஊற்றி மூன்று மாதம் பராமரிக்க வேண்டும் என்று அன்போடு தெரிவித்தவர், அப்படிப் பராமரிக்கவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டவும் செய்தார்.

காவல் கண்காணிப்பாளரின் அன்பான கட்டளையைக் கேட்ட வாகன ஓட்டிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்துப் பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், ஹெல்மெட்டையும் தவறாமல் அணிகிறோம் என்று உறுதியளித்துவிட்டுச் சென்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த வித்தியாசமான நடவடிக்கை அந்தப் பகுதியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்