கோவையில் பொது நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற இந்து முன்னணி நபர் - தட்டிக்கேட்ட பெண் மீது கடும் தாக்குதல்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த திலகத்திற்கு, செம்மாண்டம்பாளையம் பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. திலகத்தின் இடத்திற்கு அருகே, திருப்பூரை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் முருகேசன் என்பவர் அண்மையில் விவசாய பூமியை வாங்கியுள்ளார். இருவரது நிலத்திற்கும் இடையே உள்ள பொதுவழி, தனக்கு தான் சொந்தம் என்று முருகேசன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்
இந்நிலையில் பொதுவழிதடத்தை முருகேசன் கம்பி வலை மூலம் அடைக்க முயன்றுள்ளார். அதை பார்த்த திலகம், பொதுத்தடத்தை ஏன் அடைக்கிறீர்கள் என முருகேசனை தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த முருகேசன், திலகத்தை கண்மூடிதனமாக தாக்கியுள்ளார்
மேலும் தாக்கும் காட்சிகளை பதிவு செய்த திலகத்தின் செல்போனை தட்டி விட்டுள்ளார். இதனையடுத்து திலகம் தன்னை தாக்கிய இந்து முன்னணி பிரமுகர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் முருகேசன் மீது மிரட்டல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முருகேசனுக்கும், திலகத்திற்கும் இடையேயான வாக்குவாதம் மற்றும் தாக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.