மாற்றுச்சாவி போட்டு திருடுவதை தடுக்க விரல் ரேகை பதிவு மூலம் பைக்கை இயக்கும் கருவி: சாகுபுரம் பள்ளி மாணவரின் படைப்பு தேசிய அளவில் சிறந்ததாக தேர்வு
விரல் ரேகை பதிவு மூலம் இருசக்கர வாகனத்தை இயக்கக்கூடிய பாதுகாப்பு கருவி தேசிய அளவில் சிறந்த படைப்புகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவர் தயாரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம், மத்திய அரசின் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பணியகம் (அடல் இனோவேஷன் மிஷன்), குஜராத் பல்கலைக்கழக தொடக்க நுழைவு கவுன்சில் ஆகியவை இணைந்து குழந்தைகளின் புதுமை படைப்பு விழாவை நடத்தின. இதில், தேசிய அளவில் மாணவர்கள் வீடியோ மூலம் பதிவு செய்து அனுப்பிய 462 படைப்புகள் இடம்பெற்றன.
தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஏ.என்.அபிஷேக் ராம், இருசக்கர வாகனத்தை டூப்ளிகேட் சாவி போட்டு திருடிச் செல்வதை தடுக்கும் வகையில், உரிமையாளரின் விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் வண்ணம் கருவி ஒன்றை உருவாக்கி, அதனை வீடியோவாக பதிவு செய்து அனுப்பியிருந்தார். இந்த கருவி அகில இந்திய அளவில் சிறந்த படைப்புகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
மாணவர் அபிஷேக் ராமையும், அடல் டிங்கரிங் ஆய்வக பொறுப்பாளர் சேர்ம சத்திய சீலியையும், பள்ளி டிரஸ்டிகளான டிசிடபிள்யூ நிறுவன தலைவர் முடித்ஜெயின், மூத்த செயல் உதவித் தலைவர் ஜி.சீனிவாசன், மூத்த பொது மேலாளர் பி.ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் சண்முகானந்தன், தலைமை ஆசிரியர் இ.ஸ்டீபன் பாலாசீர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.