இஸ்லாமியர்களின் உரிமைகளை அ.தி.மு.க. அரசு ஒருபோதும் விட்டு கொடுக்காது; ஜமாத் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு

 


ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்

கோவை போத்தனூரில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.அப்துல் ஜப்பார் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:-

உலமாக்களுக்கு ஓய்வூதியம்
இஸ்லாமிய பெருமக்களுக்காக அ.தி.மு.க. அரசு பல்வேறு நன்மைகளை செய்து கொடுத்து வருகிறது. புனித ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் 5 ஆயிரத்து 145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு உள்ளது. நாகூர் தர்கா சந்தன கூடு திருவிழாவுக்கு சந்தன கட்டையை விலையில்லாமல் கொடுக்கிறோம். உலமாக்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள மத்திய அரசு கொடுத்து வந்த நிதியை ரத்து செய்தபோதும் நாங்கள் அந்த நிதியை கொடுத்து வருகிறோம்.

ரூ.10 கோடியாக உயர்வு
தற்போது அந்த நிதியை உயர்த்த வேண்டும் என்று இஸ்லாமிய மக்களும், ஜமாத் தலைவர்களும் கோரிக்கை வைத்தீர்கள். இதுகுறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் என்னிடம் தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள ரூ.6 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக நிதி உயர்த்தப்பட்டு உள்ளது.

என்னை பொறுத்தவரைக்கும் இந்து, முஸ்லிம், கிருஸ்தவர் என எந்த மதமாக இருந்தாலும் அவர்களின் தெய்வம் மற்றும் மதம் அவரவர்களுக்கு புனிதமானது. மற்றவர்கள் இடையில் நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எனவே நீங்கள் அச்சப்பட வேண்டாம். தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அதனை காப்பதில் எனது அரசின் கடமை.

விலை கொடுத்து வாங்க முடியாது
சில அரசியல்வாதிகள் சொந்த பயனுக்காக இதை தவறாக பயன்படுத்து கிறார்கள். என்னை பொறுத்தவரை நான் அரசியலுக்காக எதுவும் பேசுவதில்லை. மனதில் பட்டதை பேசுவேன். என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது. அடிமைப்படுத்தவும் முடியாது. பேரறிஞர் அண்ணா சொன்னது போல் பதவி என்பது தோளில் போட்டு இருக்கும் துண்டு மாதிரி என்று நினைப்பவன் நான்.எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் பக்ரீத், ரமலான் நோன்பின்போது பிரியாணி செய்து கொடுத்து அனுப்புவார்கள். அதை நான் மட்டும் சாப்பிட மாட்டேன். என்னுடைய வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவோம். எனது வீட்டில் நாள்தோறும் 3 வேளையும் 300 பேருக்கு சாப்பாடு கொடுத்து வருகிறேன். எனவே நான் எல்லோரையும் குடும்பமாக பார்க்கிறேன்.

ஒருபோதும் விட்டுக்கொடுக்காது
மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை கண்டு அச்சப்படுகிறார்கள். யாரையும் யாரும் மிரட்ட முடியாது. மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு. எந்த சூழ்நிலைகளிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை அ.தி.மு.க. அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. சிலர் அரசியல் லாபத்துக்காக பேசுவார்கள். ஆனால் எங்கள் சொல்லும், செயலும் ஒரே நிலையில் இருக்கும்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எவ்வளவோ சோதனைகளை தாண்டி நாங்கள் நிலைத்து நிற்கிறோம். இதற்கு நாங்கள் நேசிக்கிற அல்லா தான் காரணம். சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பது அ.தி.மு.க. அரசு தான்.

நாகூர் தர்கா
அண்மையில் நான் நாகப்பட்டினம் சென்றபோது அங்குள்ள நாகூர் தர்காவுக்கு சென்று வணங்கினால் நினைத்தது நடக்கும் என்றார்கள். எனவே நான் அங்கு சென்று வணங்கினேன். அப்போது அங்கு உள்ள தடுப்புச்சுவர், குளம் சிதிலம் அடைந்து கிடந்தது. இதைப்பார்த்ததும் உடனடியாக சீரமைக்க ரூ.5 கோடியே 37 லட்சம் ஒதுக்கீடு செய்தேன் தற்போது பணிகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் வீடு இல்லாத எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எந்த சாதியாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் வீடுகள் கட்டிகொடுக்கப்படும். அதற்காக எத்தனை கோடிகள் ஆனாலும் பரவாயில்லை. ஏழைகளுக்கு வீடு கட்டித்தருவது உறுதி. எங்கள் ஆட்சியில் தான் இஸ்லாமிய குழந்தைகள் உயர்கல்வி படிப்பது அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சருக்கு விருது
முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் சமூக கல்வி பாதுகாவலர் என்ற விருது வழங்கப்பட்டது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்