அ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்!
சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்ற குருமூர்த்தி பேச்சின் பின்னணியில், சசிகலா - ஓ.பி.எஸ்-ஸை அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவருவதற்கான பா.ஜ.க-வின் அரசியல் மூவ் இருப்பதாகச் சொல்கின்றனர் விவரமறிந்த முக்கியப்புள்ளிகள்.
2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வை வீழ்த்த அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் நடைபெறும் மாற்றங்கள்தான் தமிழக அரசியலில் ஹைலைட்டாகக் கலக்கிக்கொண்டிருக்கின்றன. துக்ளக் ஆண்டு விழாவில், ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சுகள் இதற்கான முன்னோட்டம்தான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். `தி.மு.க-வை வீழ்த்த அ.தி.மு.க-வில் சசிகலாவை இணைத்துக்கொள்வது அவசியம்' என்று பேசிய குருமூர்த்தி, கூடவே தன்னுடைய மாறுபட்ட நிலைப்பாட்டுக்கான காரணத்தையும் அதே மேடையில் விவரித்ததுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.
அதாவது, `எரிகிற தீயை அணைப்பதற்கு கங்கை நீரை எதிர்பார்த்து காத்திருப்பதைவிட, கிடைக்கிற சாக்கடையைக் கொண்டு தீயை அணைப்பதுதான் நல்ல முடிவு’ என்ற அர்த்தத்தில், சசிகலாவை உருவகப்படுத்தி அவர் பேசியிருப்பது அ.ம.மு.க மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.
இதற்கிடையே, அ.தி.மு.க தரப்பிலிருந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `தான் ஓர் அரசியல் சாணக்கியர்; கிங் மேக்கர் என்று நினைத்துப் பேசியிருக்கிறார் குருமூர்த்தி. இங்கே எந்த வீடும் பற்றி எரியவில்லை... எனவே, எந்தத் தண்ணீரையும் ஊற்றி அணைக்க வேண்டிய தேவையும் இல்லை... டி.டி.வி.தினகரனிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவர் இப்படிச் சொல்கிறாரா?' என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ்,
'``அ.தி.மு.க-வில் இவரைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; அவரைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை சொல்வதற்கு குருமூர்த்திக்கு துளியளவு உரிமையும் கிடையாது; அதற்கான தகுதியும் கிடையாது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சிறப்பாக நடவடிக்கை எடுத்து, கட்சியையும் ஆட்சியையும் திறம்பட நடத்திவருகிறார்கள். இந்த நேரத்தில், தேவையற்ற கருத்துகளைக் கூறி குருமூர்த்தி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
சசிகலாவுக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட வகையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. அவர்கள் தனக்கென்று தனியாக ஓர் இயக்கத்தை கடந்த மூன்று வருடங்களாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் கடந்த நான்கு வருடங்களாக சிறப்புற ஆட்சி செய்துவருகிறோம். இந்தநிலையில், சசிகலா எங்களைப் பற்றிப் பேசுவதில்லை. நாங்களும் அவரைப் பற்றிக் கருத்து சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் தேவையில்லாத விஷயம்.
ஏற்கெனவே குருமூர்த்தியின் ஆலோசனையின்பேரில்தான் எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செயல்பட்டார் என்றெல்லாம் சிலர் வெளியில் சொல்லிவருகிறார்கள். அதில் எள்ளளவும் உண்மையில்லை. இவரைப் போன்று தரம் தாழ்ந்த மனிதர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்ற காரணத்தால், எங்கள் கட்சித் தலைமை அமைதிகாத்து வருகிறது.
வாகனத்தில் செல்லும்போது, குறிப்பிட்ட ஒரு மிருகம் சாலையைக் கடந்தால், வாகனத்தை நிறுத்தி அந்த மிருகம் சென்ற பிறகுதான் நாம் கடந்துசெல்வோம். காரணம், `அந்த மிருகத்தைத் தொட்டால் அல்லது மோதினால் நமக்கு அது தீட்டு அல்லது தீங்கு’ என்ற அச்சத்தினால்தான் ஒதுங்கிச் செல்கிறோம். ஆனால், அந்த மிருகமோ, `நாம் மிகவும் பெரிய பலசாலி. நம்மைப் பார்த்து பஸ், கார் எல்லாம் பயந்து நிற்கின்றனவே...' என்று நினைப்பதுபோல் இருக்கிறது குருமூர்த்தியின் நடவடிக்கை'' என்கிறார் காட்டமாக.
இதற்கிடையே சர்ச்சையாகிவரும் தனது பேச்சுக்கு விளக்கம் கொடுக்கும்விதமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் குருமூர்த்தி `மன்னார்குடி குடும்பம் மாஃபியாதான்' என மீண்டும் விமர்சித்திருக்கிறார். இது குறித்து அ.ம.மு.க தலைவர்களிடம் கருத்து கேட்பதற்காகத் தொடர்புகொண்டபோது, `தற்போதைய சூழலில், இது குறித்துப் பேச வேண்டாம் எனக் கட்சித் தலைமை அறிவுறுத்தியிருக்கிறது' என்ற ஒற்றைவரியோடு தொடர்பை துண்டித்துக்கொண்டனர்.
சசிகலா விடுதலைக்கு இன்னும் சில நாள்களே எஞ்சியிருக்கும் சூழலில், சசிகலா குறித்த குருமூர்த்தியின் பேச்சுக்குப் பின்னே நடைபெற்றுவரும் அரசியல் காய்நகர்த்தல்கள் குறித்துப் பேசுகிற முக்கியப் புள்ளிகள், ``இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையிலுள்ள தற்போதைய அ.தி.மு.க தேர்தலைச் சந்தித்தால், தி.மு.க-வை வெற்றிகொள்ள முடியாது. ஏனெனில், இவர்கள் இருவரிடமும் தலைமைக்கான ஆளுமையோ, மக்கள் செல்வாக்கோ இல்லை. இந்தச் சூழலில், சசிகலா ஒருவர்தான் கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் மக்களிடையேயும் அறியப்பட்ட, தலைமைப்பண்புமிக்க தலைவராக இருக்கிறார். எனவே, அ.தி.மு.க-வின் முகமாக சசிகலாவை முன்னிறுத்தி, தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே தி.மு.க-வுக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுக்க முடியும் என்பது பா.ஜ.க-வின் திட்டம். சசிகலா - ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு முக்குலத்தோர் வாக்குகள் அனைத்தும் ஒருங்கே கிடைக்கும் என்பதும் இந்த வியூகத்தின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், பா.ஜ.க-வின் இந்தச் செயல்திட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமியிடமிருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. `முதல்வர் வேட்பாளர்' என்ற தன்னுடைய அரசியல் முன்னேற்றத்தை சசிகலாவிடம் பறிகொடுக்க விரும்பாத எடப்பாடி, எம்.எல்.ஏ-க்களையும் கட்சியின் முக்கியஸ்தர்களையும் தன் பக்கம் ஈர்க்க கடும் முயற்சிகள் எடுத்து வருகிறார். ஏற்கெனவே இ.பி.எஸ் உடன் அரசியல் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருந்த ஓ.பி.எஸ்., பா.ஜ.க-வின் ஐடியாவுக்கு டபுள் ஓ.கே கொடுத்ததோடு பத்திரிகை, தொலைக்காட்சிகளில் தன்னை முன்னிறுத்தி விளம்பரமும் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
இதையடுத்து, அ.தி.மு.க-விலுள்ள சசிகலா ஆதரவு தலைவர்களை ஒன்றிணைக்கும் அசைன்மென்ட் அ.ம.மு.க-விடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் திரைமறைவில் இதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறார்கள். இதில், கோகுல இந்திரா, ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் வெளிப்படையாக என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்" என்கிறார்கள்.
இதனிடையே டி.டி.வி தினகரன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த சோ, தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர். அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.. கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல. துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
.