'எங்களை இப்படி துரத்தியடித்தால் நாங்கள் எங்கே போவோம்?' - கண்ணீர் விடும் இருளர் மக்கள்

 


மலைப்பகுதியில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் குடிசை போட்டு தங்கியிருந்த இருளர் இன மக்களை அங்கிருந்து விரட்டியடித்ததால், தங்குமிடமில்லாமம் அந்த மக்கள் குழந்தை குட்டிகளுடன் தவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகேயுள்ள சிறுகுன்றம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏராளமான இருளர் இன மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வந்தனர். இதையடுத்து, வருவாய்த் துறையினர் அனுமதி பெற்று மலைப் பகுதியில் தார்ப்பாய் குடிசை போட்டு தங்கி இருந்தனர். இந்த மக்கள் காயார், மானாமதி, தையூர், கரும்பாக்கம், சென்னேரி, கருநீலம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் , கரி சூளை , செங்கல் சூளை, மரம் வெட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்தால் பெண்களுக்கு ரூ. 250 ஆண்களுக்கு ரூ. 400 வரை கூலி கிடைத்துள்ளது.

ஆனால், இந்த மக்களுக்கு தங்குவதற்கு நிரந்தரமாக எந்த இடமும் இல்லை. இதனால், சிறுகுன்றம் மலைப்பகுதியில் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் மக்கள் மலைப்பகுதியில் தார்ப்பாய் குடிசை போட்டு தங்கியிருந்தனர். ஆனால், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தற்காலிகமாக போடப்பட்ட தார் பாய்களை அகற்றியும் கிழித்து எரிந்தும் இருளர் இன மக்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால், இருளர் மக்கள் மலைப்பகுதி இடத்தை விட்டு நகராமல் மறுத்து தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர்.

தொடர்ந்து, திருப்போரூர் போலீசார் இருவரிடமும் தரப்பினரிடத்திலும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அரசு அதிகாரிகளிடத்தில் இருளர் இன மக்கள் தங்கள் குறைகளை வேதனையுடன் தெரிவித்தனர்.

இருளர் இன மக்கள் கூறுகையில் , '' நாங்கள் தான் படிப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறோம். எங்கள் குழந்தைகளாவது படிப்பதற்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடத்தில் முறையிட்டாலும் பலனில்லை. மரம் வெட்டுவது, செங்கல் சூளை, அடுப்புக்கரி சூளை போன்ற பணிகளை தவிர வேறு எந்த வேலையும் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு எந்த வசதியும் செய்து தராமல் துரத்தியடித்தால் நாங்கள் குழந்தை குட்டிகளுடன் எப்படி வாழ்வது '' என்று கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்