இலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை!
அரியலூர் அருகே கள்ளச்சந்தையில் இலவசமாக மது கேட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை அங்கிருந்தவர்கள் தாக்கியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் டி.பழூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஜெகதீசன் ( வயசு 53). நீதிமன்றம் தொடர்புடைய பணி, எஸ்.பி அலுவலக முகாம் பணி, மதுவிலக்கு பணிகளில் ஈடுபட்டு வந்தார். டி.பழூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த ஜெகதீனை விட்டு குடும்பத்தினர் பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது.
கடந்த 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு பிறகும் அவர் பணிக்கு வரவில்லை. காவல் நிலையத்தில் இருந்து அவரின் செல்போனை தொடர்பு கொண்டனர். போனை எடுக்காததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு போலீஸ்காரரை காவல் நிலையத்திலிருந்து தொடர்புகொண்டு ஜெகதீசனை அழைக்குமாறு கூறியுள்ளனர். போலீஸ்காரர் ஒருவர் ஜெகதீசன் வீட்டு கதவை தட்டிய போது , கதவு திறந்தே கிடந்துள்ளது. வீட்டினுள் சென்று பார்த்த போது உள்ளே ஜெகதீசன் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். தகவலறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ். பி தேவராஜ் விரைந்து விசாரணை மேற்கொண்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு டி.எஸ்.பி தேவராஜ் உத்தரவிட்டார். தனிப்படை அமைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஜெகதீசன் கடந்த 9 ஆம் தேதி இரவில் குடித்து விட்டு மது போதையில் சாலையில் கிடந்துள்ளார். தொடர்ந்து 10 ஆம் தேதி இரவும் மது அருந்தியுள்ளார். கள்ளத்தனமாக மது விற்பவர்களிடத்தில் சென்று மது பாட்டில் வாங்கி குடித்துள்ளார். முதலில் மது கேட்ட போது கொடுத்த கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, ஜெகதீசன் தொந்தரவு செய்யதால் கோபமடைந்துள்ளனர். இதனால், கட்டையை கொண்டு ஜெகதீசனை அடித்து விரட்டியுள்ளனர். காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிய ஜெகதீசன் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது