காதலியை கடத்திக் கொன்ற கொடூரர்கள்..! சாதி மறுப்பு காதல் கொடுமைகள்


திண்டுக்கல் அருகே நூற்பாலையில் தங்கி வேலைபார்த்த இளம்பெண்ணை, தனிமையில் பேச அழைத்து காதலனே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
காதல் இனித்து, திருமணம் கசந்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அடுத்த கள்ளிமந்தையம், வாகரையில் உள்ள டெக்ஸ்டைல் மில்லுக்கு பின்புறம் காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கள்ளிமந்தயம் காவல்துறையின் விசாரணையில், அவர், வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்பது தெரிந்தது.

வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் நுற்பாலையில் பணிபுரிந்து வந்தநிலையில், கடந்த 1ந்தேதி மாலை பணிக்கு சென்ற ஜெயஸ்ரீ வீடு திரும்பவில்லை.

எங்கே தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்காததால் பெற்றோர் வடமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஜெயஸ்ரீயின் செல்போனை ஆய்வு செய்ததில், ஒரே நாளில் 20 க்கும் மேற்பட்ட முறை ஒரே எண்ணில் இருந்து போன் வந்ததைக் கண்டறிந்தனர்.

போன் வந்த எண்ணை ஆய்வு செய்ததில் அந்த எண் ஜெயஸ்ரீ உடன் பணி புரிந்து வந்த தங்கதுரை என தெரிய வந்தது. கள்ளிமந்தையம் போலீசார் தங்கதுரையைப் பிடித்து விசாரணையை மேற்கொண்டனர்.

பழனி அருகே உள்ள கோம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கதுரை, தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் ஜெயஸ்ரீயும் பணிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது பின்பு இருவரும் விடுமுறை நாட்களில் தனியாக சந்தித்து பழகியுள்ளனர். இந்த காதல் கடந்த ஆறுமாத காலமாக மலர்ந்த நிலையில் தற்போது ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார்.

சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்த தங்கதுரை, தன்னை திருமணம் செய்து கொள்ள ஜெயஸ்ரீ வற்புறுத்துவதாக அவரது வீட்டிற்கு போன்று செய்ததால், ஜெயஸ்ரீயை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனிடையே 31ந்தேதி அன்று இரவு தங்கதுரைக்கு தெலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயஸ்ரீ, மறுநாள் அங்கு வருவதாகவும், தன்னை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 1ந்தேதி மாலை ஒட்டன்சத்திரத்திற்கு பேருந்தில் வந்த ஜெயஸ்ரீயை, இருசக்கர வாகனத்தில் வந்த தங்கதுரை மற்றும் அவருடன் பணிபுரியும் கூட்டாளி ஜெகநாதன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

மூவரும் கள்ளிமந்தையம் அருகே உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு பின்புறம் வைத்து காதலை முறிப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற ஆத்திரமடைந்த தங்கதுரையும் அவரது கூட்டாளியும் சேர்ந்து ஜெயஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கேயே ஒரு புதரில் உடலை மறைத்து வைத்து விட்டு தப்பியது விசாரணையில் அம்பலமானது.

இதற்கிடையே காதலனின் வெறிச்செயல் குறித்து அறிந்த ஜெயஸ்ரீயின் உறவினர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு தாராபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கொலையாளிகள் இருவரையும் தூக்கிலிட வேண்டும் எனக் கூச்சலிட்ட அவர்கள், மறியலை கைவிட்டு விட்டு ஜெயஸ்ரீயின் உடலை வாங்கிச்சென்றனர்.

கைது செய்யப்பட்ட தங்கதுரை மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரையும் கள்ளிமந்தையம் போலீசார் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

அதே நேரத்தில் காதலில் விழுந்து காதலனை நம்பிச்சென்ற பாவத்துக்கு அப்பாவி பெண் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்