சட்டப்பேரவை தேர்தலை எவ்வித பிரச்னையுமின்றி சுமுக முறையில் நடத்த வேண்டும் - தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
சட்டப் பேரவைத் தேர்தலை சுமுகமாக நடத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் பணிகளுடன் நேரடி தொடர்பு கொண்ட அதிகாரிகளை, தங்கள் சொந்த மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், கடந்த 3 ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்தவர்களை அந்த மாவட்டத்திலேயே மீண்டும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் அறிக்கை ஒன்றில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் தேர்தல் பணிகளின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தால், அவர்களை தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.