அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் 25ல் நடக்கிறது: அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியால் சசிகலா புறக்கணிப்பு..பாஜ தலைமையுடனும் பேச்சு; பரபரப்பு தகவல்கள்

 


சென்னை: பாஜ தலைமையுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சி போன்றவற்றால் அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை சசிகலா புறக்கணித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.

 அந்த வகையில், அமமுக கட்சியும் தனது செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வருகிறார்.

சிறையில் இருந்து வெளியில் வந்த அவருக்கு அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவரது வருகைக்கு பின்பு அதிமுகவை மீட்டெடுப்போம் என்று டிடிவி.தினகரன் கூறி வருகிறார். ஆனாலும் சென்னை வந்த பின்பு சசிகலா யாரையும் சந்திக்கவில்லை. யாருடனும் ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. இதற்கிடையே, தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் சேர தயாராக இருப்பதாகவும், 40 சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பினர் பாஜ தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ஆனால் அதிமுக தலைமையோ சசிகலா உடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராக இல்லை என்று உறுதியாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பிரதமர் மோடியும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் பாஜ கட்சிக்கான தேர்தல் செலவுகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வதாகவும், கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்றும் தற்போது அமித்ஷாவிடம் சசிகலா தரப்பு பேசி வருவதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக அதிமுக தலைமையுடன் பேசி வருவதாகவும், இன்னும் அவர்கள் முடிவு அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் பாஜ தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது குறித்து சசிகலா தரப்பு எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அமமுக பொதுக்குழுவை டிடிவி.தினகரன் கூட்டியுள்ளார்.இதில் சசிகலா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜ தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மற்றும் அதிமுகவை மீட்டெடுப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த கூட்டத்தை சசிகலா புறக்கணிக்க முடிவெடுத்திருப்பதாக அமமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், கட்சியினரின் கருத்துக்களை மட்டும் கேட்க வேண்டும் என்றும், தொகுதிகள் குறித்த எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும் சசிகலா, டிடிவி.தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, டிடிவி.தினகரன் கூட்ட உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

 இக்கூட்டம் குறித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான அன்பகழகன் தலைமையில் வரும் 25ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்