கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்..
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
ஆட்சேபகரமான, ஆபாசமான பேச்சுகளாலும், சமூக ஊடகப் பதிவுகளாலும், தமிழகத்தின் சமூக அமைதியைக் குலைப்பதையே நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியாக செயல்பட்டு வருபவர் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்த கல்யாண ராமன் என்பவர். இவரது ஆபாசமான பதிவுகள் முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்தது குறித்து கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பல முறை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.*
ஆனால் சிறையிலிருந்து விடுதலையான பிறகும் அவர் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறார். நேற்று ஜனவரி 31 அன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில், அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் குறித்து அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சுகள் முஸ்லிம்களையும், நல்லிணக்கம் பேணும் சகோதர இந்து, கிறிஸ்தவ மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளன.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருணத்தில் வகுப்பு கலவரத்தை தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் ரகசியத் திட்டத்தின் அடிப்படையில் அவர் மேட்டுப்பாளையத்தில் நச்சுக் கருத்துகளைப் பேசினாரோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. தொடர்ந்து முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தி, சமூகப் பதற்றத்தை உருவாக்கிவரும் கல்யாணராமன் மீதும் அவரைப் பின்னாலிருந்து இயக்குபவர்கள் மீதும், காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.