தேசிய செட்டியார்கள் பேரவை மாநில மாநாட்டில் முதல்வர் பழனிசாமி புகழாரம்
தேசிய செட்டியார்கள் பேரவை மாநில மாநாடு நேற்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது.
மாநாட்டில் தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஷ்ரா தலைமை வகித்துப் பேசினார்.தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். இதில் பங்கேற்று முதல்வர்பழனிசாமி பேசியதாவது;
வாணிபத்தையும், விவசாயத்தையும் முக்கிய தொழிலாகக் கொண்டு, தாங்களும் சிறப்பாக வாழ்ந்து, தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்துக்கும் பல்வேறு பண்பாட்டு கொடைகளை வழங்கிய செட்டியார் சமுதாய பெருமக்களை மனதார வாழ்த்துகிறேன்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுஎன்ற தத்துவத்தை செயல்வடிவமாக்கிய பேரவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர போராட்ட வீரர் சிங்கம் செட்டியார் மற்றும் கண.முத்தையா செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், கல்வி கொடை வள்ளல் ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டியார், யாழ்ப்பாண வைத்தீஸ்வரர் ஆலயம் எழுப்பிய வைத்தியலிங்கம் செட்டியார் உள்ளிட்ட இச்சமுதாய பெருமக்களின் அரசியல், பொருளாதார, கல்வி, சமுதாய கொடைகளையும், அவர்களது பங்களிப்பையும், எண்ணிப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இவர்களால் இந்த சமுதாயம் உயர்வு பெற்றுள்ளது, ஏற்றம் பெற்றுள்ளது என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன் என்றார். விழாவில் அமைச்சர்கள் மற்றும் செட்டியார் சமூக முக்கிய பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர். முதல்வருக்கு வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது