இந்த ராஜேஷ் தாஸ்? எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்? - வெளிவரும் உண்மைகள்!
தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி-யாக பணியாற்றி வந்தவர் ராஜேஷ்தாஸ். தூத்துக்குடி எஸ்.பி, தென் மண்டல ஐ.ஜி, சென்னை தெற்கு இணை ஆணையர் என பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கம். அதனாலேயே பல சீனியர் இருக்கையில் சிறப்பு டி.ஜி.பி-யாக அமரவைக்கப்பட்டார் ராஜேஷ் தாஸ்.
சமீபத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸும் சென்றுள்ளார். சுற்றுப்பயணம் முடிந்து திரும்பிச் செல்லும் வழியில் மாவட்ட எஸ்.பியான பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் ராஜேஷ் தாஸ்.
பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி தெரிவித்த பாலியல் புகாரின் அடிப்படையில் ராஜேஷ்தாஸ் மீது விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் மீது காவல்துறை வட்டாரத்திலும் ஏகப்பட்ட புகார்கள்.
ராஜேஷ் தாஸ் முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் என்பது கூடுதல் தகவல். அதன் காரணமாகவும் அ.தி.மு.க அரசின் முக்கிய தலைகளுடனும், உயர் அதிகாரிகளுடனும் நெருக்கமானார் என்கிறார்கள்.
பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தன் மீது பாலியல் புகார் அளிக்க சென்னை செல்லும் தகவல் அறிந்து, அடுத்தடுத்து மூன்று அதிகாரிகளை அனுப்பி சமாதானம் பேச முயன்றுள்ளார் ராஜேஷ் தாஸ். மேலும், டி.ஜி.பி ரேங்கில் இருப்பவரை பகைத்துக்கொள்ள வேண்டாம் என மிரட்டல் விடுக்கும் தொனியிலும் அவர்கள் பேசியுள்ளனர். ஆனால், அந்த பெண் அதிகாரியோ, சிறப்பு டி.ஜி.பிக்கு உதவுவதற்காக தன்னை வந்து மிரட்டிய அதிகாரிகளின் பெயரையும் தனது புகாரில் சேர்த்து அளித்துள்ளார்.
ராஜேஷ்தாஸ் மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றியபோதே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இணை ஆணையராகப் பணியாற்றியபோது சினிமா துறையைச் சேர்ந்த ஒருவருக்கு சிவில் விவகாரம் ஒன்றில் உதவி செய்தார் என்பதாகவும் சர்ச்சை எழுந்தது.
தென்மண்டல ஐ.ஜி-யாக பணியாற்றியபோது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மிரட்டியதாகவும் ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது.
கூடங்குளம் போராட்ட பிரச்னையில் தடியடி, நூற்றுக்கணக்கானோர்மீது வழக்கு என பெரும் சர்ச்சைகளுக்கு காரணமானர் ராஜேஷ் தாஸ். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜையின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டபோது அங்கு பணியிலிருந்தவர் ராஜேஷ் தாஸ்தான்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, அத்தியாவசியப் பொருள்களுக்கே தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மதுபானங்கள் பிளாக்கில் சர்வ சாதாரணமாக விற்கப்பட்டன. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளிலிருந்த மொத்த மதுபானங்களும் தனியாருக்கு கைமாற்றப்பட்டு, பிளாக்கில் ரவுண்ட் அடித்தன. இதில் பல நூறு கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அப்போது மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யாக பணியாற்றியவர் இதே ராஜேஷ் தாஸ்.
பாலியல் புகாரில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் செய்த அட்ராசிட்டிகள் கொஞ்சநஞ்சமில்லை என்கிறது காவல்துறை வட்டாரம். ராஜேஸ் தாஸ் சைக்கிளிங் செய்வதற்காக அவர் செல்லும் மாவட்டங்களுக்கு அவரது உத்தரவின்பேரில் சென்னையில் இருந்து சைக்கிளும் அனுப்பப்படுமாம். ஆனால் சைக்கிளில் ஒரு கி.மீ தூரம் கூட பயணிக்கமாட்டாராம். மீண்டும் அவரது சைக்கிளை சென்னைக்கு அனுப்பும் பொறுப்பையும் அதிகாரிகளே ஏற்க வேண்டுமாம். ‘இதுக்கு பருத்துமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே’ எனக் குமுறுவது அதிகாரிகளுக்கு வாடிக்கை.
இப்படி, முறைகேடுகளுக்கும், அடாவடிகளுக்கும் பெயர்போன அதிகாரியை சிறப்பு டி.ஜி.பியாக எடப்பாடி பழனிசாமி நியமித்ததற்குக் காரணம், தேர்தல் நேரத்தில் தமக்கு உதவுவார் எனத் திட்டமிட்டுத்தானாம். இப்போது பாலியல் புகார் விஸ்வரூபமெடுத்திருப்பதால் வேறு வழியின்றி தரமிறக்கப்பட்டுள்ளார் ராஜேஷ் தாஸ்.