ஒற்றை வார்த்தையில் பதிலளித்த ஓவியா
களவானி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஓவியா. பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழகத்தில் மிகவும் பிரபலமானார். மனதில் தோன்றியதை, தனக்கு சரியென்று பட்டதை நேரடியாக பேசக் கூடியவராக ஓவியா அறியப்படுகிறது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14-ம் தேதி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு பிப்ரவரி 13-ம் தேதி ஓவியா கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கைப் பதிவிட்டார். அவருடைய ஹேஷ்டேக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து மோடி தமிழகம் வருகை தரும்போதேல்லாம் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டெக் ட்ரெண்ட் செய்யப்பட்டுவருகிறது. கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் தி.மு.கவினரால் ட்ரெண்ட் செய்யப்படுகிறது என்று பா.ஜ.கவினர் கூறிவந்தனர்.
இந்தநிலையில், ஓவியாவும் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் பதிவிட்டது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, ஓவியா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் சுதாகர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகாரளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, “பிரதமர் மோடி இந்தியாவின் இறையாண்மையை காப்பதில் முக்கியமான பங்கு உடையவர். பிரதமர் தமிழகம் வரும்போது சமூக வலைதளத்தில் ‘கோ பேக் மோடி’ என கருத்தை பதவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தூண்டிவிடும் செயலில் நடிகை ஓவியா ஈடுபடுவதாகவும், இறையாண்மையை கெடுக்கும் வகையில் நடிகை ஓவியா செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஓவியா மீண்டும் ஒற்றை வார்த்தையில் மற்றொரு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஜெய்ஹிந்த், கருத்து சுதந்திரம்(freedomofthoughts)’ என்று பதிவிட்டுள்ளார்.