சசி வீட்டில் ரகசிய பூஜை - ஜெயா டி.வி.யைக்கூட அனுமதிக்கவில்லை
சிறையில் இருந்து ரிலீஸ் ஆன சசிகலாவால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் எதிர் பார்ப்பும் அதிகரித்தபடியே இருக்கிறது. கடந்த 27ஆம் தேதியோடு சிறைவாழ்க்கையை முடித்துக்கொண்ட சசிகலா, ஒருவாரம் பெங்களூரில் ரெஸ்ட் எடுத்த நிலையில் அங்கிருந்து 8-ஆம் தேதி புறப்பட்டு, திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியுடன், டிராபிக் ஜாம் ஏற்படுத்தி 9-ந் தேதி அதிகாலை சென்னையை வந்தடைந்தார்.
சென்னை தி.நகரில் இருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிற்கு வந்த அவர், காரை விட்டு கீழே இறங்காமல் உள்ளேயே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார். அந்த வீட்டின் முன்பு பூவினால் அலங்கரிக்கப்பட்ட கோலம் போடப்பட்டு, செவளை நிறத்தில் பசுவும், கன்றும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, காரை விட்டு இறங்காமல் எல்லாவற்றையும் அவர் கவனித்தபடியே இருந்தார்.
அப்போது, ஜெயலலிதாவையும் சசிகலாவையும் வைத்து, அவர்களுக்கு எல்லா விதமான பூஜைகளையும் வழக்கமாகச் செய்தவரான அகஸ்தியர் கோவில் அர்ச்சகர் வேதாந்தி, பயபக்தியோடு வந்து, அந்தப் பசுவையும் கன்றையும் சசிகலாவின் முகம் பார்க்க வைத்தார். அதன் பிறகு அவற்றை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.
அதன்பின் காரை விட்டு மெதுவாக இறங்கிய சசிகலாவை, மலர் கோலத்தின் மீது, வடக்குத் திசை நோக்கி நிற்க வைத்து பூசணிக்காய், எலுமிச்சை உள்ளிட்டவற்றை வைத்து சாங்கியம் செய்த பிறகு, தயார் நிலையில் இருந்த 5 சுமங்கலியான மங்கள பெண்கள் அவரது கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.
அங்கே ஹாலில் 20 நிமிடம் வரை அமர்ந்திருந்த சசிகலா, சுடச்சுட பாலை அருந்தினார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர், அ.ம.மு.க.வின் மாநில நிர்வாகிகளான ரெங்கசாமி, மனோகரன், செந்தமிழன் மற்றும் பதவி பறிப்புக்கு ஆளான அவர்கள் தரப்பு முன்னால் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து 15 நிமிடம் உரையாடினார்.
ஒரு புதுமனை புகு விழாவிற்குச் செய்யப்படும் கணபதி ஹோமம் உள்ளிட்ட அனைத்து விதமான சடங்குகளும், சாங்கியங்களும் சசிகலா வருகைக்காக அந்த வீட்டில் செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகள் எதுவும் கட்சியினருக்கோ, டி.டி.வி. தினகரனுக்கோ கூட தெரியாத அளவுக்கு மிகவும் ரகசியமாக செய்யப்பட்டிருந்தது. அதனால், அங்கே ஒளிபரப்புக்காக வந்த ஜெயா தொலைக்காட்சியின் செய்தியாளர்களைக் கூட, அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
கட்சிப் பிரமுகர்களிடம் பேசி, அவர்களை அனுப்பி வைத்த சசிகலா, வீட்டிற்குள் நுழைந்த பின், அனைத்துக் கதவுகளும் தாழிடப்பட்ட நிலையில் மேலும் சில சடங்கு சம்பிரதாயங்கள் அங்கே நடந்திருக்கின்றன. மீண்டும் பவர் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட சடங்குகள் சசிகலாவுக்கு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.