கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், சி ஏ ஏ போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீதும், குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் கைவிடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் தேவைகளை அதிமுக அரசு பூர்த்தி செய்து வருகிறது என்றார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஊர் ஊராக சென்று மு.க.ஸ்டாலின் வாங்கிய மனுக்களுக்கு என்ன தீர்வு கிடைத்தது என அவர் கேள்வி எழுப்பினார்.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் திமுகவினரே அதிகம் பயனடைந்திருப்பதாகவும், அவர்கள் அதிமுகவுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
அதிமுக ஜனநாயக இயக்கம் என்றும், எதிர்காலத்தில் சாதாரண மனிதன்தான் முதலமைச்சராக வர முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். கொரோனா ஊரடங்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சுமார் 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக அவர் அறிவித்தார்.
இதேபோல, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சுமார் 1,500 வழக்குகளில், வன்முறை மற்றும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பானவை மற்ற வழக்குகள் கைவிடப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்தார்.
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிடுவது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அவர் பேசிக்கொண்டு இருந்த போது ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததால் அதற்கு வழிவிடும்படி முதலமைச்சர் ஒழுங்குபடுத்தினார்.
புளியங்குடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், எதிர்காலத்தில் ஏழை என்ற சொல்லே இல்லாமல் ஆக்குவோம் என்றார். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சங்கரன்கோவிலில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.