சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணை விழுப்புரத்தில் நாளை தொடக்கம்
தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது அவரை காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும், அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கு ஆதரவாக சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலரும் குரல் கொடுத்தனர்.
தமிழக முக்கிய எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வகித்துவந்த சிறப்பு டிஜிபி (சட்டம் ஒழுங்கு) பதவியும் நீக்கப்பட்டது. முன்னர் இருந்தபடி ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு எனத் தரமிறக்கம் செய்யப்பட்டது. கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இப்புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க டி ஜி பி திரிபாதி உத்தரவிட்டார்.. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஏடி எஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் விசாரித்து அறிக்கை அனுப்ப உத்த்கரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, சம்பவம் நடைபெற்றது விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதி என்பதால் இம்மாவட்ட போலீஸாரை நாளை முதல் விசாரிக்க உள்ளோம். விசாரணை அறிக்கையை சென்னை சிபிசிஐடி போலீஸாருக்கு அனுப்பி வைப்போம் என்றனர்.