நடிகர்அஜித்! - அதிர்ந்துபோன சென்னை மாநகர் போலீஸ்!
நடிகர் அஜித் பல ஆண்டு காலமாக நடிப்பு மட்டும் அல்லாமல், பைக், கார் ரேஸ், குதிரை ஏற்றம், விமானம் ஓட்டுதல் போன்ற பல ஹாபிகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த வரிசையில், பழைய கமிஷ்னர் அலுவலகத்தில், ரைஃபில் கிளப்பில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்துவருகிறார். படப்பிடிப்பு நேரம்போக இதுபோன்ற பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபட்டுவருகிறார்.
எப்போதும் அஜித் திடீரென்று பல சர்ப்ரைஸ்களை செய்வார். தனது வீட்டில் பல கார்கள் வைத்திருந்தாலும், இன்று காலை 8.30 மணியளவில், தனது திருவான்மியூர் வீட்டிலிருந்து சென்னை ரைஃபில் கிளப் இயங்கிவரும் பழைய கமிஷ்னர் அலுவலகத்திற்குச் சென்று வர தனியார் வாடகை டாக்ஸியை புக் செய்திருந்தார். அதன்படி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் செல்லும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். அதன்படி, தனியார் கால் டாக்ஸி டிரைவரும் தற்போது இயங்கிவரும் புதிய கமிஷ்னர் அலுவலகத்தின் மூன்றாம் எண் நுழைவு வாயிலில் சென்று வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அஜித் துப்பாக்கிப் பயிற்சி எடுக்கும்போது உடுத்தும் டீ-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து காரைவிட்டு இறங்கி, தான் வைத்திருந்த ‘ஏர் கன்’ துப்பாக்கிப் பேக்கையும் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், முகக் கவசம் அணிந்திருந்த அஜித்தை தெரியாமல் “இங்கெல்லாம் ஷாட்ஸ் போட்டுக்கொண்டு வரக்கூடாது. இது கமிஷ்னர் அலுவலகம்” என்று கூறியுள்ளனர்.
அதற்கு அஜித், “இது கமிஷ்னர் அலுவலகம்தானே” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த காவலர், “ஆமாம், நீங்கள் யார்” எனக் கேட்டதற்கு, “நான்தான் நடிகர் அஜித்” என முகக்கவசத்தை கழட்டி முகத்தைக் காட்டியதும் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். என்ன செய்வது என்று புரியாத போலீஸார், அஜித்தை ‘மக்கள் தொடர்பு’ உதவி ஆணையர் பாஸ்கரன் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பாஸ்கரன் இல்லாததால், பணியிலிருந்த ஆய்வாளர் கண்ணன், மற்றும் இதர போலீஸார், யார் இது என்று கேட்டுள்ளனர். “நான்தான் அஜித்” என்று முகக் கவசத்தைக் கழட்டி முகத்தைக் காட்டியவுடன் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் செய்வதறியாமல் நின்றனர்.
அவர்கள் நிலையைக் கண்ட அஜித், “நான் சென்னை கமிஷ்னர் அலுவலகம்தானே வந்துள்ளேன்” என்று கேட்டார். அதற்கு போலீஸார், “ஆமாம் சார் நீங்கள் எங்கு செல்ல வேண்டும்; இங்கு ஏன் வந்தீர்கள்” எனக் கேட்டுள்ளனர். நான் கமிஷ்னர் அலுவகலத்திற்குள் இயங்கிவரும் ரைஃபில் கிளப்பில் துப்பாக்கிச் சூடும் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறேன். இது எந்த இடம் எனத் தெரியவில்லை என அஜித் சொல்ல, அங்கிருந்த போலீஸாரோ, சார் அது போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் எனச் சொல்ல, உடனடியாக அங்கிருந்து அஜித் வெளியே கிளம்பினார்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அப்போது, நுழைவுவாயில் 3 அருகே உள்ள அறையில் இருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் வேறு செய்தி விஷயமாக வெளியே சென்றிருந்ததால் அஜித் வந்துசென்றது பத்திரிகையாளர்களுக்கே தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார், அஜித் கமிஷ்னர் அலுவலகம் வந்துசென்ற புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் பரவவிட, அஜித் கமிஷ்னர் அலுவலகத்திற்குப் புகார்தான் கொடுக்க வந்துள்ளாரோ என எண்ணி பத்திரிகையாளர்கள் கமிஷ்னர் அலுவலகத்தில் குவிந்தனர். பின்னர், விசாரித்தபோதுதான், நடந்த விவரம் சுவாரசியமாக வெளிவந்தது. நாமும் இங்கே இருந்திருந்தால் அஜித்துடன் செல்ஃபி எடுத்திருக்கலாமே எனப் புலம்பியபடி பத்திரிகையாளர்கள் தங்கள் அறைக்குச் சென்றனர். இந்தச் சம்பவம் கமிஷ்னர் அலுவலகத்தைப் பரபரப்பாக்கியது.