பள்ளி மாணவிகளின் பெற்றோர், உறவினர்களுக்கும் கரோனா: தொற்று பாதிப்பு 67 ஆக அதிகரிப்பு
தஞ்சாவூரின் அம்மாப்பேட்டை பகுதியில் பள்ளி மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் 10 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தொற்று பாதிப்பு 67 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 1,100 மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு படிக்கும் மாணவி ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, காய்ச்சல் ஏற்பட்டதால் பரிசோதனை செய்தபோது அவருக்குக் கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் 1,500 மாணவிகள் மற்றும் 35 ஆசிரியர்களுக்கு தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது . இதில் 56 மாணவிகள், ஒரு ஆசிரியை என 57 பேருக்குக் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவிகளின் ஊர்கள் உள்ள 24 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில் நேற்று மாணவிகளின் பெற்றோர் 4 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இன்று (16-ம் தேதி) மேலும் சில பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன.
இதில் மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் 6 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தொற்று பாதிப்பு 67 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைத் தமிழக மருத்துவக் கல்வி இயக்கக இயக்குனர் நாராயண பாபு நேரில் பார்வையிட்டு உடல்நலம் குறித்து விசாரித்தார்.