இரு முறை எம்.எல்.ஏ.,வாகாத தொகுதி இது
தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தொகுதி, 1971ல் இருந்து, 11 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதுவரை, ஒரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர், மீண்டும் போட்டியிட்டதாக சரித்திரம் இல்லை. ஒரே கட்சி, அடுத்தடுத்து இரண்டு முறை வெற்றி பெற்றதும் இல்லை.
கடந்த, 1971ல், சுப்பையா முதலியார், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றார். பின், 1977ல், அ.தி.மு.க.,வின் ரசாக்; 80ல், முஸ்லிம் லீக்கின் சாகுல் அமீது; 84ல், அ.தி.மு.க.,வின் பெருமாள்; 89ல், தி.மு.க.,வின் கா.மு.கதிரவன்; 91ல், அ.தி.மு.க., நாகூர்மீரான்; 96ல், தி.மு.க.,வின் நயினா முகம்மது; 2001ல், அ.தி.மு.க.,வின் சுப்பையா பாண்டியன்; 2006ல், காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்; 2011ல், செந்துார் பாண்டியன், 2016ல், முஸ்லிம் லீக்கின் முகமது அபுபக்கர் என, வெற்றி பெற்றுள்ளனர்.
ஒருவர் கூட மறுதேர்தலில் வெற்றி பெற்றதில்லை. ஒரு நபர், இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாகவும் இருந்ததில்லை. இந்த முறை தி.மு.க., கூட்டணியில், மீண்டும் முஸ்லிம் லீக்கிற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநில பொதுச் செயலர் என்பதால், முகமது அபுபக்கரே மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. மீண்டும் வெற்றி பெறுவாரா அல்லது தொகுதி, 'சென்டிமென்ட்' வேலை செய்யுமா... காத்திருப்போம், மே, 2ம் தேதி வரை.