பற்ற வைத்த ஓபிஎஸ்.......வேகமாக ஹோட்டலுக்கு போன இபிஎஸ்..* *மையம்கொள்கிறது சசி புயல்!* யார் அந்த சூத்திரதாரி?
தமிழக அரசியலை துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் பேட்டி உலுக்கி உள்ள நிலையில்....
முதல்வர் பழனிசாமி திடீரென சேலத்தில் மீட்டிங் ஒன்றை நடத்தி வருகிறார்.
தமிழக அரசியலை விட்டே "ஒதுங்கிக்கொள்வதாக" சசிகலா அறிவித்துள்ள நிலையில் தற்போது திடீரென சசிகலாவிற்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேசியுள்ளார்.
சசிகலா மீது எனக்கு கோபமோ வருத்தமோ இருந்தது இல்லை.. எப்போதுமே இருந்தது இல்லை.
சசிகலாவின் பெருந்தன்மையை மதிக்கிறேன். அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் என்று ஓ.பி.எஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதிமுக தரப்பை இந்த பேட்டி குலுக்கி உள்ளது.
ஓ.பி.எஸ் தனது பேட்டியில் சசிகலாவிற்கு ஆதரவாக பேசுவது போல பேசினாலும், ஒரு பக்கம் சின்ன செக் வைத்தும் இருக்கிறார். சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்வதை பற்றி பரிசீலிக்கலாம். ஆனால் ஒரு குடும்பத்திற்கு கட்டுப்பட்டு கட்சி இருக்காது. அவர் அதிமுகவின் அமைப்பிற்கு கட்டுப்பட வேண்டும் , என்று ஓ.பி.எஸ் மறைமுகமாக செக் வைத்துள்ளார்
ஓ.பி.எஸ் கொடுத்த இந்த பேட்டி அதிமுகவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கட்சிக்குள் மீண்டும் சசி புயலை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு பின் சசிகலாவை மீண்டும் உள்ளே கொண்டு வரும் யுக்தியா இது ? கிளைமேக்ஸுக்கான சமாதான தூதா இந்த பேட்டி என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. முக்கியமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கு எப்படி எதிர்வினையாற்ற போகிறார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவிற்குள் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது திடீரென முதல்வர் பழனிசாமி சேலத்தில் மீட்டிங் நடத்தி வருகிறார். பிரச்சாரத்திற்கு இடையில் பாதியில் முதல்வர் பழனிசாமி இந்த மீட்டிங்கை நடத்தி வருகிறார். இந்த மீட்டிங்கில் முதல்வர் பழனிசாமி என்ன பேசுகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த அவசர சேலம் மீட்டிங்கில் சசிகலா - ஓ.பி.எஸ் குறித்து பேசுகிறார்களா.. இல்லை வெறும் தேர்தல் பற்றி மட்டும் பேசிக்கொள்கிறார்களா என்று தெரியவில்லை. பிரச்சாரத்திற்கு இடையில் இந்த மீட்டிங் நடப்பது சந்தேகத்தை வரவழைத்துள்ளது. கண்டிப்பாக இந்த மீட்டிங்கில் சசிகலா குறித்து பேசப்படும். ஓ.பி.எஸ் பேட்டி குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன.
ஓ.பி.எஸ் இப்படி திடீர் என்று பேட்டி அளிக்கிறார் என்றால் அதற்கு கண்டிப்பாக யாராவது காரணமாக இருப்பார்கள். ஓ.பி.எஸ்ஸின் இந்த தைரியத்திற்கு பின் கண்டிப்பாக பின்னணியில் ஒரு சூத்திரதாரி இருப்பார். இல்லையென்றால் தேர்தல் நேரத்தில் சசிகலா குறித்து ஓ.பி.எஸ் இப்படி பேசி இருக்க மாட்டார். இதற்கு பின் வேறு சில விஷயங்கள் நடந்து இருக்கலாம் என்று அதிமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிகின்றன.
பல முடிச்சுகள் இனிதான் அவிழும் என்றும் ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவில் நிறைய மாற்றங்கள் நடக்கிறது.சசிகலா குறித்து ஓ.பி.எஸ் இப்படி பேசியதும், இப்போது அவசரமாக இபிஎஸ் மீட்டிங் நடத்தி வருவதும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் ஒருவேளை கிளைமேக்ஸ் வந்து விடுமோ என்ற சந்தேகத்தை இது எழுப்பி உள்ளது.