“காவல்துறையை மிரட்டும் திமுக” – முதல்வர் குற்றச்சாட்டு!
காவல்துறையின் உயர் அதிகாரிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் எனக் கூறினார்.
விவசாயிகள் மத்தியில் அதிமுகவின் மதிப்பு உயர்ந்து வருவதாகக் கூறிய முதலமைச்சர் பழனிசாமி, திமுக அரசியல் கட்சி அல்ல என்றும் அது ஒரு கம்பெனி எனவும் விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்து உங்களிடம் இருக்காது எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர் என்றும் தனது பரப்புரையின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முன்னதாக மதுரை ஒத்தக்கடையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது எனவும் அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்றும் கூறினார்.
திமுக ஆட்சி என்றாலே அராஜக ஆட்சிதான் எனவும் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்து தான் நடக்கும் என்றும் விமரித்தார். திமுக ஆட்சியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, ஏழை எளிய மக்கள் மீது அக்கறை கொண்டது அதிமுக ஆட்சி எனத் தெரிவித்தார்.