சிறப்பு டிஜிபி-யை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது தமிழக அரசு
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி தமிழக டி.ஜி.பி திரிபாதி, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பினார். அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார். அவரது பாதுகாப்புக்காக சென்னையில் இருந்து வந்த சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், சென்னைக்கு காரில் திரும்பும்போது உயர் அதிகாரி என்பதால், மாவட்ட எல்லையில் மரியாதை நிமித்தம் அவரை வரவேற்றபோது காரில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். சிறப்பு டி.ஜி.பி மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி புகார் அளித்தது ஊடகங்களில் செய்தியாக பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சிறப்பு டிஜிபி கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த பாலியல் புகார் தொடர்பான அறிக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் புகாரில் சிக்கிய, சிறப்பு டிஜிபியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த சிறப்பு டிஜிபி-யை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.