ஓட்டு கேட்டு வந்த அதிமுக எம்எல்ஏ-வை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!
மேலூர் அருகே வாக்கு கேட்டு வந்த சட்டப்பேரவை உறுப்பினரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரவில்லை என புகார் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் கோட்டைவாசல் முன்பு, மேலூர் சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக வேட்பாளருமான பெரியபுள்ளான் என்ற செல்வத்திற்கு ஆதரவாக, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா பரப்புரையை தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, அ.வலையப்பட்டி, அழகாபுரி போன்ற பகுதியில் பொதுமக்களை சந்தித்து அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம் வாக்கு சேகரித்துவிட்டு, அய்யம்பட்டி பகுதிக்கு வரும்போது பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையை மறித்து, சட்டப்பேரவை உறுப்பினரான பெரியபுள்ளான் என்ற செல்வத்தை வாக்கு சேகரிக்கவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள், கடந்த 5 வருடமாக சட்டமன்ற உறுப்பினராகவும், அருகே உள்ள அ.வலையப்பட்டியை சேர்ந்தவருமான தாங்கள், இங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து தரவில்லை. இதனால் குடிநீர், சாலை வசதி மற்றும் தெருவிளக்கு இல்லாமல் அவதியுற்று வருவதாக தெரிவித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினரான பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை கிழக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் தமிழரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அய்யம்பட்டி பகுதியில் நடந்தே அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர், இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது