காசு கொடுத்தாதான் ஓட்டு... களமிறங்கிய யோகி பாபு
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘மண்டேலா’. ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க இயக்குநர் பாலாஜி மோகன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின்ராஜ் எடிட் செய்துள்ளார். பரத் சங்கர் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
ஒரேகட்டமாக ஷூட்டிங்கை முடித்திருக்கும் படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்று இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில் இன்று டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
அதில், தேர்தலில் கள்ள ஓட்டுப்போட வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படுகிறார் யோகி பாபு. நெல்சன் மண்டேலா என்று பெயரிட்டிருப்பதால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
ஒருகட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களிடம் ஓட்டுக்கு காசு வாங்கிய யோகி பாபு நோட்டாவைப் பார்த்து விட்டு மூன்றாவது ஒரு நபர் இருப்பதாகவும் யாராக இருந்தாலும் காசு கொடுத்தால் தான் நான் ஓட்டுப் போடுவேன் என்றும் நகைச்சுவையாக கூறுகிறார்.
மேலும் ஆர்.கே.நகரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இருபது ரூபாய் நோட்டு டோக்கனாக கொடுக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையையும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு. தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் நய்யாண்டி செய்ய சரியான நேரத்தில் களமிறங்கியுள்ளார் கதாநாயகன் யோகி பாபு.