சைதாப்பேட்டையில் துணை ராணுவத்தினர் நடத்திய அணிவகுப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தில் 4,500 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதற்காக துணை ராணுவத்தினர் அந்தந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் துணை ராணுவத்தினர் பிரிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், வாக்காளர்களை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம் என்று தெரிவிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட தெருக்களில் அணிவகுப்பு நடத்தி உள்ளனர்.
சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட 9 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதியில் கையில் துப்பாக்கி ஏந்தியபடி துணை ராணுவத்தினர் அணிவகுத்து சென்றனர். இவர்களை அடையாறு காவல்துறை துணை ஆணையர் விக்ரமன் மற்றும் உதவி ஆணையாளர் காவல் துறையினர் வழி நடத்திச் சென்றனர்.
அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது என்று பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக காவல்துறையுடன் இணைந்து துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.