தமிழகத்தில் படுதீவிரமாக பரவுகிறது கரோனா: தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்தது- பணிச் சுமையால் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பரிதவிப்பு
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் படுதீவிரமாகி வருகிறது. தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிவதால்புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் பணிச் சுமையால் பரிதவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கரோனா தொற்றின் 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு12 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 60-ஐ நெருங்கியுள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன
சென்னையில் அரசு, தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால், புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
லேசான மற்றும் அறிகுறிகள் இல்லாத தொற்று பாதிப்புள்ளவர்கள் கண்காணிப்பு மையங்களுக்கும், வீட்டு கண்காணிப்புக்கும் அனுப்பப்படுகின்றனர். மூச்சுத் திணறல், கடுமையான நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களை மட்டும் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர்.
கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியானதும் ஏராளமானோர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கிண்டிஅரசு கரோனா மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்குத்தான் வருகின்றனர். படுக்கைகள் இல்லாததால், பரிசோதனை முடிவு மற்றும் நுரையீரல் ஸ்கேனைபார்த்துவிட்டு ஓரளவு பாதிப்பு இருப்பவர்களை வீட்டு கண்காணிப்பில் இருக்கும்படி கூறி அனுப்புகின்றனர். தொற்றின் தீவிரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கொடுத்து உட்கார வைத்துவிட்டு, சுகாதாரத்துறை அதிகாரிகளின் உதவியுடன் எங்குபடுக்கை காலியாக இருக்கிறதோ அங்கு ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை அனுப்பி வைக்கின்றனர்.
புதிதாக 12,652 பேர்
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று புதிதாக 12 ஆயிரத்து 652 பேர்கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறைவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 7,583, பெண்கள் 5,067, மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்என மொத்தம் 12,652 பேர் கரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 36 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 3,789, செங்கல்பட்டில் 906, கோவையில் 689, திருவள்ளூரில் 510, மதுரையில் 495, திருநெல்வேலியில் 449,சேலத்தில் 411, காஞ்சிபுரத்தில் 392, திருச்சியில் 359, தூத்துக்குடியில் 354 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 37,711 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 34,966 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 7,526 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தற்போது 89,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 59 பேர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 102 வயது மூதாட்டி உயிரிழந்தார். சென்னையில் மட்டும் நேற்று 24 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,317 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிச்சுமையால் பாதிப்பு
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டுஇவர்கள் தனியார் விடுதி, நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன.
ஆனால், இந்த ஆண்டு அதுபோன்ற எந்த சலுகையும், உதவியும்வழங்கப்படவில்லை. மேலும், கடந்த ஆண்டைப்போல ஒப்பந்த அடைப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அதிக அளவில் நியமிக்கப்படாததால், தற்போது பணியில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால் மருத்துவர்களும் செவிலியர்களும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.