சித்தனக்காவூரில் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் 2 பேர் கைது
உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த 2 அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்துள்ள சித்தனக்காவூரில் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஓட்டளிக்கக்கூறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக, தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை குழுவினர் சித்தனக்காவூரில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சித்தனக்காவூர் அ.தி.முக பிரமுகர் வேங்கப்பன் என்பவரிடமிருந்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த 20000 ரூபாயை பறிமுதல் செய்து, அவரை சாலவாக்கம் போலீசில் ஒப்படைந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஒரகடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அதிமுக உறுப்பினர் ராமதாஸ் அதிமுக கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தார். இது தொடர்பாக எழுந்த புகாரில் போலீசார் ராமதாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.