விதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை... தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
தடையை மீறி பிரசாரம் மேற்கொண்டால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்ததால், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளார். திரைப்படம், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்யக்கூடாது என்றும், மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வேட்பாளர் மற்றும் முகவர்களின் வாகனங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சியினர் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். இது தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள விடுதிகளில், இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.