சட்டமன்ற தேர்தல் எதிரொலி;32 லட்சம் பேருக்கு உதவித் தொகை திடீர் நிறுத்தம்-முதியோர், மாற்றுத் திறனாளிகள் அவதி

 


தமிழகம் முழுவதும், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், இலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உட்பட தமிழகம் முழுவதும் 32 லட்சம் பேருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம், உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் வங்கி சேமிப்புக் கணக்குகள் மூலமும், அஞ்சல் துறை மூலமும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான உதவித்தொகை தற்போதுவரை யாருக்கும் வழங்கப்படாததால், பயனாளிகள் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டகிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் சுந்தரவிமல்நாதன் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தல் விதி முறைகள் காரணமாக, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் அவதியடைந்து உள்ளனர். எனவே, தமிழக தேர்தல் ஆணையர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதற்கு முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், இதுபோன்ற உதவித்தொகைகள் வழங்குவது நிறுத்தப்படவில்லை. ஆனால், நிகழாண்டு இந்த உதவித்தொகை வழங்குவதை தமிழக அரசே நிறுத்தி வைத்துள்ளது.

எங்களிடம் உதவித்தொகை கேட்டு பலரும் முறையிட்டு வருகின்றனர். நாங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசின் கவனத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் உதவித் தொகைகள் வழங்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்