சென்னை மாநகராட்சி இணைந்து கண்ணகி நகரிலுள்ள படித்த 70 மாணவ, மாணவியர்களுக்கு இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. அதனை அடையாறு துணை கமிஷ்னர் விக்ரமன் துவக்கிவைத்தார்
தமிழக அரசு சார்பில், சென்னையிலுள்ள படித்த ஏழை, எளிய மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்பு தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்க திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பேரில், தமிழக அரசின் சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், சென்னையில் பகுதி வாரியாக படித்த வேலையில்லாத ஏழை மாணவர்கள் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு தகவல்கள் மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் அளித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், அடையாறு காவல் துணை கமிஷ்னர் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் அடையாறு பகுதியில் படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன்பேரில், J-11 கண்ணகிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் படித்த வேலையில்லாத 70 ஏழை மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்பேரில், சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையமும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல்துறை இணைந்து, இன்று கண்ணகிநகர், சுனாமி நகரிலுள்ள சமூக நலக்கூடத்தில் மேற்படி மாணவ, மாணவிகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திறன் மேம்பாட்டுக்கழகத்தின், மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, மண்டல துணை ஆணையர் (தெற்கு) ஆல்பி ஜான், அடையாறு காவல் துணை கமிஷ்னர் விக்ரமன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு, படித்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாமினை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 70 மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசின் சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்காக விண்ணப்பித்து, அவர்களுக்கு இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கான எழுத்து தேர்வு, உடற் கூறு தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.