பூச்சி மருந்து குடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் குளிர்பானத்தில் பூச்சி மருந்தைக் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர்

முஸ்டக்குறிச்சி கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் முனியம்மாளுக்கு மதன்குமார், முத்துமணி ஆகிய இரு மகன்களும், ஜெயலலிதா என்ற மகளும் உள்ளனர். முனியம்மாளின் கணவர் முத்துச்சாமி, கடந்த 7 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில், தன் தாய் அடைக்கலத்தை (வயது 70) தனி வீட்டில் வைத்துப் பார்த்து வருகிறார் முனியம்மாள். இரண்டு மகன்களும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். மகள் ஜெயலலிதாவை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கிழவனேரி கிராமத்தில் முத்துக்குமார் என்பவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முனியம்மாள் கடைக்குப் பொருட்களை வாங்க அப்பகுதி மக்கள் சென்றபோது கடை திறக்காமல் இருக்க, வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டில் முனியம்மாள் இருப்பதாக கருதி வீட்டின் கதவைத் தட்டினர். அப்போது, முனியம்மாளும் மகள் ஜெயலலிதாவும் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு, அவருடைய தாயார் அடைக்கலம் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அடைக்கலமும் இறந்து கிடந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், ஆவியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், முனியம்மாள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இறந்த நிலையில் கிடந்த இருவருக்கும் அருகில் பூச்சி மருந்தும் குளிர்பான பாட்டில்களும் இருந்துள்ளன

போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் (26/04/2021) இரவு முனியம்மாள், வீட்டில் பருத்தி, கடலை போன்ற பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குளிர்பானங்களில் கலந்து, தன் தாயார் அடைக்கலத்துக்கும், தனக்கும், தன் மகள் ஜெயலலிதாவுக்கும் கலந்து கொடுத்துள்ளதும், மூன்று பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது. தான் உயிரைவிட முடிவு செய்தவுடன், தனது தாயார் அடைக்கலத்துக்கும் குளிர்பானம் கலந்த பூச்சி மருந்தைக் கொடுத்திருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தக் கிராமத்தினரிடையே, பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மூவரும் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியாத நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்