புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் வாக்காளர் அட்டையுடன் டோக்கன்..! அதிமுக பிரமுகர் கைது..!
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்கள் தரப்பில் இருந்து ஓட்டுக்குப் பணம் கொடுத்துவிட்டனர். அதன்பிறகு, நேற்று மாலை முதல் வேட்பாளர்கள் தரப்பில் இருந்து டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் களப்பக்காடு பகுதியில் நேற்று இரவு வீடு வீடாகச் சென்ற அதிமுகவினர், வாக்காளர்களின் அடையாள அட்டைகளை வாங்கியுள்ளனர். அதனடிப்படையில், இன்று வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம், அடையாள அட்டையுடன் இரட்டை இலை சின்னம் அச்சிடப்பட்ட டோக்கன்களையும் வழங்கியுள்ளனர். மேலும், மாலை இந்த டோக்கனுக்கு ரூ.200 வழங்கப்படுவதாகக் கூறியுள்ளனர். இதனைப் பார்த்த திமுகவினர் டோக்கன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பறித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால், டோக்கன் கொடுத்த அதிமுக பிரமுகர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.