எடப்பாடியில் அதிகவாக்குப் பதிவு: கொளத்தூரில் குறைவு
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. காலையில் 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தில் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர்.
சைக்கிளில் வந்த விஜய், ரசிகரின் செல்போனை பறித்த அஜித், நடந்து வந்து வாக்குப்பதிவு செய்த விக்ரம், காத்திருந்து வாக்களித்த சூர்யா, கார்த்திக், சிவக்குமார் என சினிமா நட்சத்திரங்கள் வைரலாகினர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.
இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களை சீல் வைக்கும் பணிகள் நடந்துமுடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்குப்பதிவு விவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். அதில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கத்தில் 55.52% வாக்குகளும், அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தங்களை முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்துள்ளனர்.
அதில், பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அதிகபட்ச வாக்குப் பதிவாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளது. எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் 60.5 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளது. கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 60.7 சதவீத வாக்குகளும், டி.டி.வி.தினகரன் போட்டியிடும் கோவில்பட்டியில் 67.43 சதவீத வாக்குகளும், சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.