கொரோனா தொற்றுக்கு உள்ளான வடமாநில ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கார் ஓட்டி, அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மதுரை கலெக்டர் அன்பழகன் சேர்த்தார். இதனால் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் போலீசாரை கண்காணிப்பதற்காகவும், வேட்பாளர்கள் தெரிவிக்கும் புகார் மனுக்களை பெறுவதற்காகவும் தேர்தல் காவல் பார்வையாளராக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தரம்வீர் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார்.
இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுரை வந்து மதுரை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காவலர் விடுதியில் தங்கியிருந்தார். தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த அவருக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அறிந்த ஐ.பி.எஸ். அதிகாரி தரம்வீர், ஆஸ்பத்திரியில் சேருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது, தனது உதவியாளரான டிரைவர் ஒருவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், அந்த டிரைவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ஆஸ்பத்திரிக்கு வர தயக்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அன்பழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த கலெக்டர் அன்பழகன் நேற்று மதியம் தனது சொந்த காரில் கொரோனா பாதிப்பு கவச உடை அணிந்தபடி காவலர் விடுதிக்கு சென்றார். அந்த ஐ.பி.எஸ். அதிகாரியை அழைத்து வந்து, தானே கார் ஓட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தார்.
அந்த ஐ.பி.எஸ். அதிகாரி கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் செல்லும் வழியில் பெரிய ஆஸ்பத்திரி டீன் சங்குமணியை தொடர்புகொண்டு, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கும்படி கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்படி காரில் வந்திறங்கிய உடனேயே, ஐ.பி.எஸ். அதிகாரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிமாநிலத்தை சேர்ந்த தேர்தல் பார்வையாளரான ஐ.பி.எஸ். அதிகாரிக்கு உதவிய மதுரை மாவட்ட கலெக்டருக்கு பாராட்டு் குவிந்து வருகிறது.