முழு ஊரடங்கு; என்னென்ன இயங்கும், என்ன இயங்காது? முழு விவரம்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 25ம் தேதி சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்தது. எனினும், நோய்த் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன்படி தற்போது, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
முழு ஊரடங்கில் என்னென்ன இயங்காது, எதற்கெல்லாம் அனுமதி கிடையாது:
1. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது. இந்த முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கில் என்னென்ன இயங்கும், எதற்கெல்லாம் அனுமதி:
1. பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2. முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
3. ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினரும் தொடர்ந்து பணியாற்றலாம்.
4. அதேபோல, தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5. முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை கண்காணிப்பதற்காக 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைச்சாவடிகளில் ஒரு போலீஸ் அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் வாகன தணிக்கை பணிகளில் ஈடுபடுவார்கள். விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது