வாக்குச்சாவடியில் மாஸ்க் அணியாமல் இருந்ததாக திமுகவின் பூத் ஏஜெண்டுகள் வெளியேற்றம்
சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லஸ் சந்திப்பில் முகக்கவசம் இல்லாமல் அதிகளவில் கூடியிருந்ததாக திமுகவின் பூத் ஏஜெண்டுகளை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
சென்னை மாநகரில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.மயிலாப்பூர் லஸ் சந்திப்பு வழியாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் சென்றபோது, திமுகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் முகக்கவசம் அணியாமல், அனுமதிக்கப்பட்டதை விட அதிக பேர் கூடியிருந்ததால் அவர்களை அங்கிருந்து கலைந்து போக சொல்லி உத்தரவிட்டார். மேலும் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் அனைவரையும் கலைந்து செல்ல வைத்தனர். அப்போது, திமுகவினருக்கும், காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.இதையடுத்து கீழ்ப்பாக்கம் பச்சையப்பா கல்லூரி எதிரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு செய்தார். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில்களை காவல் ஆணையர் வழங்கினார்.