சத்திரக்குடி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள காமன்கோட்டையில் வசிக்கும் ராஜேந்திரன் வள்ளிமயில் தம்பதியரின் மகன்கள் பாதாளம்(27) சசி முருகன்(25) ஆகிய இருவரும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஊருக்கு அருகே உள்ள ஊரணி கரையில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் பூமியில் தம்பதியரின் மகன்கள் பாதாளமுருகன்(30) அருண்(25) இதில் பாதாளமுருகன் பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று பாதாளமுருகனும், அருணும் குடிபோதையில் வந்து ஊரணிகரையில் அமர்ந்து கொண்டிருந்த பாதாளம் மற்றும் சசிகுமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் தகராறு முற்றி அருகிலிருந்த கம்பி மற்றும் கட்டையால் இருவரும் சேர்ந்து இருவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சசிகுமாரும் பாதாளமும் மயங்கி விழுந்தனர் உடனே அருகில் இருந்தவர்கள் கூடி காயம் பட்டவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக பாதளமுருகனும், அருணும் ஊரை விட்டு ஓடி தலைமறைவாகி விட்டனர். இச்சம்பவம் குறித்து வள்ளிமயில் சத்திரக்குடி காவல் நிலையத்தில் பாதாளமுருகன் மற்றும் அருண் மீது புகார் அளித்தார்.
பாலமுருகன் தீயணைப்பு படை வீரராக பணியாற்றி வருவதால் புகாரை வாங்க மறுத்து இருவரும் தலைமறைவாகிவிட்டனர் வந்த உடன் பிடித்து விசாரிக்கலாம் என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். மேலும் காயம் பட்டவர்கள் காயம் அதிகமாக ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஒருவர் மதுரை தனியார் மருத்துவமனையிலும் ஒருவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆத்திரமடைந்த வள்ளிமயில் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி சத்திரக்குடி காவல் நிலையத்தின் முன்பு திரண்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டு புகார் வாங்கி விட்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருக்கும் காவல்துறையினர் மீது ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக பாலமுருகன் மற்றும் அருண் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதனால் சத்திரக்குடி காவல் நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் பதற்றம் ஏற்பட்டது.