அரசு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பதில் தாமதம் - ஆம்புலன்சிலேயே மூவர் உயிரிழப்பு
தமிழகத்தில் சில அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கை ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் படுக்கைகள் நிரம்பியதால் அவசர சிகிச்சைக்காக வருவோர் திண்டாடுவதாக நோயாளிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்சில் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு தலைமை மருத்துவமனையில் 252 படுக்கைகளும் மாவட்டம் முழுவதும் 800 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதியுடன் உள்ள நிலையில் தொடர்ந்து ஏராளமானோர் வருவதால் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
படுக்கைகள் நிரம்பி உள்ளதால் தாமதமாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காலை முதல் தற்போது வரையிலும் புற நோயாளிகளாக வந்த 3 பேர் தாமதம் காரணமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.