எங்குமே ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
கொரோனா தொற்றின் மூன்றாம் அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கக்கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையம் வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்காக செய்யப்படுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளோம்.
தமிழகத்தில் அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக கரோனா பாதிப்பு 36 ஆயிரத்திலிருந்து தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவிற்கு குறைந்துள்ளது.
தமிழகத்திற்கு சமீபத்தில் 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 46 கோடி ரூபாய் செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்காக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆக்சிஜனுக்கு இக்கட்டான சூழல் இருந்தது. ஆனால் தமிழக சுகாதாரத் துறை, தொழில்துறை, மின்சார வாரியத் துறைகளின் முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு தற்போது மருத்துவ ஆக்சிஜன் தேவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாம் அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கக்கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் கொரோனா பாதிப்பிலுள்ளவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
"ஸ்டீராய்டு" கொடுப்பதனாலும், அசுத்தமான தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அதை மூச்சாக உள்ளிழுப்பதன் மூலமாகவும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு வல்லுனர்கள் குழு இரண்டு நாட்களில் ஆராய்ச்சியை தொடங்கும்.
கொரோனா உயிரிழப்பு குறித்த உண்மையைச் சொன்னால் தான் விழிப்புணர்வு வரும். எனவே கொரோனா தொற்று உயிரிழப்புகளின் எந்த ஒளிவு மறைவும் இல்லை” எனத் தெரிவித்தார்.