இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் - தமிழக அரசு
தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இ-பதிவு முறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கும் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம், மருத்துவச் சிகிச்சை, இறப்பு, முதியோர் தேவை போன்றவற்றுக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலரும் போலியான காரணங்களைக் கொண்டு திருமணம் என்று விண்ணப்பிப்பதால் திருமணம் என்ற பிரிவை தற்போது தமிழக அரசு நீக்கியுள்ளது.