தடுப்பு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட ஆட்சியர்கள் உத்தரவு : எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர் சங்கம்..!!

 


சென்னை : கொரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவிற்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசு பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், கெரோனாவை கட்டுப்படுத்த மருத்துவம் சாராத பணிகளில் அனைத்து துணை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பணிகளை நிறைவேற்ற ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 135 பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர், போலீஸ், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர் மற்றும் அந்த பகுதி பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் கொண்ட குழு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.

இதேபோல, மாவட்ட முழுவதும் காய்ச்சல் பாதிப்புடையவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளை கண்டறியும் விதமாக, களப்பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது :- கொரோனா தொற்றின் 2-வது அலையில் தற்போது வரை சுமார் 500 ஆசிரிய-ஆசிரியைகள் உயிரிழந்து உள்ளனர். சட்டமன்ற பொதுத்தேர்தலில் மட்டுமின்றி தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்கும் பணி, வாக்கு எண்ணிக்கை பணி ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இதனால் பெருந்தொற்றுக்கு உள்ளாகி, அரசு ஆஸ்பத்திரிகளில் இடமில்லாமல், தனியார் ஆஸ்பத்திரிகளில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியாமலும் பல லட்சம் ரூபாய் செலவழித்து பலர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்து உள்ளனர்.

இந்தநிலையில் திருப்பூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவம் சாராத பணிகளுக்கு ஆசிரிய-ஆசிரியைகளை பயன்படுத்த உத்தரவிட்டு உள்ளனர். ஆசிரியர்கள் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்படாத நிலையிலும், முன்களப்பணியாளர்களைப்போன்று ஆசிரியர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

குறிப்பாக கொரோனா தொற்று அதிகம் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஆட்சியரின் உத்தரவின்படி பணி உத்தரவு வழங்கப்பட்ட அனைத்து ஆசிரிய-ஆசிரியைகளும் இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா பரவலால் ஏற்பட்டு உள்ள தற்போதைய நிலை ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் தெரியும். அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆசிரிய-ஆசிரியைகள் முழு ஒத்துழைப்பு தரும் அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை உயிரிழந்த டாக்டர்கள், செவிலியர், போலீசாருக்கு இணையாக உள்ளது.

பெரும்பாலான ஆசிரியர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு இணை நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர்கள் வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறி இருப்பவர்களின் பட்டியலை சேகரிக்க செல்வதால் பலருக்கும் கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது. ஆசிரியர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

எனவே களப்பணி தவிர்த்து, கொரோனா நோயாளிகளுக்கு ஆற்றுப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கும் பணிகளை கட்டுப்பாட்டு அறைகள் அல்லது வீடுகளில் இருந்து தொலைபேசி மூலம் பேசும் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். களப்பணி வழங்கப்பட்டாலும் 50 வயதுக்கு உள்பட்ட தன்னார்வலராக பணி செய்ய ஆர்வம் உள்ள ஆசிரிய-ஆசிரியைகளை இந்த பணிக்கு தேர்ந்து எடுக்கவும் வேண்டும். தன்னார்வலர்களாக களப்பணியாற்றும் ஆசிரிய-ஆசிரியைகளை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள ஆட்சியர் தரப்பில் இருந்து பல்வேறு ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும், பெரும்பாலானோர் பணிக்கு செல்லவில்லை. சிலரோ, உடல் உபாதைகளை காரணம் காட்டி விலக்கு பெற்று விட்டனர்.

இந்தநிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தும் பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்