பதவி உயர்வுக்கும், பணி நியமனத்துக்கும் அதிமுக ஆட்சியில் ₹25 கோடி லஞ்சம்” - சேலம் விஜிலன்ஸிடம் புகார்!
அதிமுக ஆட்சி காலத்தில் 2014, 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் பட்டு வளர்ச்சி துறையில் இளநிலை பட்டு ஆய்வாளர், உதவி பட்டு ஆய்வாளர் ஆகிய பணியிடங்களில் தகுதி இல்லாதவர்களை நியமித்து மோசடியில் ஈடுபட்டதாக கூறி சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பணி நியமனம் செய்ததிலும், பதவி உயர்வு வழங்கியதிலும் 25 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்று கொண்டு செயல்பட்டதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
மேலும் தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்ததில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டு காலங்களில் தமிழ்நாட்டின் வளங்களை அதிமுக ஆட்சியாளர்கள் படுகுழியில் தள்ளிவிட்டு தத்தம் பாக்கெட்டுகளை நிரப்புவதையே குறியாக இருந்ததற்கு ஒவ்வொன்றாக ஆதாரங்களும், குற்றச்சாட்டுகளும் வெளிப்பட்டு வருகிறது.
அண்மையில் இந்திய தணிக்கைத் துறை வெளியிட்ட அறிக்கை மூலம் அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற கோடிக்கணக்கான ஊழல்கள் பற்றிய விவரங்கள் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.