தடுப்பூசி சான்றிதழுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு 50% தள்ளுபடி! அசத்தும் மதுரை சலூன்
கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிதம் தள்ளுபடி வழங்கி, தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மதுரை சலூன் கடைக்காரரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கொரானா வைரஸ் தொற்று இரண்டாம் அலை தமிழகத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளன. நகர்புறத்தை கடந்து தற்போது கிராம்புறங்களில் உள்ள மக்களும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகிலுள்ள சலூன் கடை ஒன்று மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் தங்களது சலூனில் ஹேர் கட்டிங் தொடங்கி பேசியல் வரை செய்துகொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழ் அல்லது குறுந்தகவலை காண்பித்தால் அந்த வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிகித சலுகையை வழங்கி வருகிறது.
மதுரை மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து, கிருமிநாசினி தெளித்து, கைகளை சுத்தப்படுத்திய பின்னரே முடிவெட்ட அனுமதிக்கின்றனர்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் 200 முதல் 5000 ரூபாய் வரை எந்த சேவைக்கும் 50 சதவிகித சலுகையை வழங்குகின்றார் இந்த சலூன் கடை உரிமையாளர்.
தனது லாபத்தை கூட பொருட்டாக எண்ணாமல் கொரோனா பேரிடரில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் சலூன் கடைகாரரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.