ரிக்ஷா தொழிலாளிகள், குப்பைகள் எடுப்போர், வீதிகளில் வசிப்போருக்கும் ரேஷன் அட்டை வழங்குக: மத்திய அரசு அறிவுறுத்தல்
வீதிகளில் வசிப்போர், ரிக்ஷா தொழிலாளிகள், குப்பைகள் எடுப்போர், வீதிகளில் சிறு சிறு பொருட்களை விற்போர், உள்ளிட்டோரை கண்டறிந்து
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், 'அனைத்து மாநிலங்களிலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உணவினை தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தெருக்களிலும் பிளாட்பாரங்களிலும் வசிப்பவர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், வீதிகளில் குப்பைகளை எடுத்து பிழைப்பவர்கள், சிறு சிறு பொருட்களை விற்பவர்கள் மற்றும் மிகவும் நலிவடைந்த பிரிவினர் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது
மேலும், கொரோனா தொற்று காலத்தில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் உணவு கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
- நிரஞ்சன் குமார்