ஆடு திருடிய கும்பல்.. விரட்டிய கிராம மக்கள் - காரை விட்டு ஓடிய கும்பல்
திருவாரூரில் சொகுசு காரில் ஆடுகளை திருட வந்த நபர்கள் கிராம மக்களை கண்டதும் காரை விட்டுவிட்டு ஓடிய சம்பவம் நடந்துள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள், பத்து ஒன்றியங்கள், 430 ஊராட்சிகள் உள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் அதிக கிராமங்களை உள்ளடக்கியது, மேலும் விவசாயிகளும் விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டம் திருவாரூர் மாவட்டம். திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் விவசாயத்தையும் ஆடு மாடுகள் வளர்க்கும் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் கால்நடைகள் திருட்டுப் போகும் சம்பவம் என்பது தொடர் கதையாகி வருகிறது.
கோட்டூர் அருகே சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற நபர்களை கிராம மக்கள் துரத்தி சென்றதால், காரை விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சோமசேகரபுரம் கிராமத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் ஸ்கோடா சொகுசு காரில் வந்துள்ளனர். பின்னர் அக்கிரமத்தை சேர்ந்த குபேந்திரன் என்பவர் வீட்டில் இருந்த 3 ஆடுகள், உட்பட அருகே மற்ற வீடுகளில் இருந்த 3 ஆடுகள் என மொத்தம் 6 ஆடுகளை மர்ம நபர்கள் கார் டிக்கியில் அடைத்து கடத்தி செல்ல முயன்றனர்.
ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்த அப்பகுதி மக்கள் சொகுசு காரில் ஆடுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆடு கடத்திய மர்ம நபர்கள் ஆடுகளுடன் காரில் வேகமாக சென்று தப்பிக்க முயன்றனர். சோமசேகரபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு காரை துரத்தி சென்றனர். அப்போது கார் மன்னார்குடி சாலையில் சென்று கொண்டிருந்த போது இரட்டை புலி எனும் இடத்தில் எதிர்பாராத விதமாக காரில் ஏற்பட்ட கோளாறால் நடு வழியில் கார் நின்றது. இதனால் செய்வதறியாது குழம்பிய கடத்தல் காரர்கள் அவர்கள் வந்த சொகுசு காரை ரோட்டிலேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கோட்டூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் காவல்துறையினர் கடத்தப்பட்ட ஆடுகள், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து கோட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் நகர் பகுதிகளில் மட்டும் இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் நகரத்திற்கு அப்பால் உள்ள கிராமப்புறங்களிலும், இரவு நேரத்தில் காவல் துறையினர் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் திருட்டு சம்பவங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கும், மேலும் பொதுமக்கள் அச்சப்படாமல் இருக்க முடியும், உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இது போன்ற விஷயங்களில் தனி கவனம் செலுத்தி கிராமப்புறங்களில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.