சைதாப்பேட்டை கிளைச் சிறையில் சொகுசு வசதிகளோடு இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன்-புழல் சிறைக்கு மாற்றம்
நடிகை பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை கிளை சிறையில் சொகுசு வசதிகளோடு இருந்ததை போலீசார் கண்டுபிடித்ததால் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கடந்த 20 ஆம் தேதி பெங்களூரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைத்துறை அதிகாரிகள் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மணிகண்டன் சிறையினுள் ஏசி, செல்போன், சார்ஜர், சோபா என சொகுசு வசதிகளுடன் இருப்பதாக தெரியவந்தது. சில சிறை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும், உயரதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து டிஎஸ்பி தலைமையில் குழு ஒன்றை திடீரென சைதாப்பேட்டை கிளைச் சிறையில் ஆய்வு நடத்தியது.
ஆய்வில், மொபைல் ஏசி யூனிட் மற்றும் சோபா மொபைல் சார்ஜர் உள்ளிட்ட சகல வசதிகளோடு அமைச்சர் மணிகண்டன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக ஃபோட்டோ ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை புழல் சிறைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.